தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் தொடர்பான செய்திகள் பரவலாகி வரும் நிலையில் போதைப்பொருள் புழக்கத்தோடு மட்டுமல்லாமல் அதனால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் அதிகரித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். சில இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தும் நபர்கள் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்பான செய்திகளும் அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்று வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த்ன் என்பவர் மும்பையில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்துள்ளார். அதனைப் போதைக்காக இங்கு விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பெரும்பாக்கம் காவல் நிலைய போலீசார் அரவிந்தன் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது ஆயிரக்கணக்கான வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து கைது செய்யபட்ட அரவிந்தனிடம் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.