தே.மு.தி.க முன்னாள் தலைவர் மறைந்த விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இளையராஜா இசையில் யு. அன்புவின் இயக்கத்தில் ‘படை தலைவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீடியோவுடன் வெளியானது. அந்த வீடியோ பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்திலிருந்து சண்முக பாண்டியனின் பிறந்தநாளான கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி வாழ்த்து வீடியோ வெளியாகியிருந்தது.
இதையடுத்து இப்படம் கடந்த செப்டம்பரில் வெளியாவதாக அறிவித்து பின்பு சில காரணங்களால் வெளியாகவில்லை. பின்பு படத்தின் முதல் பாடல் ‘உன் முகத்த பாக்கலையே...’ லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. இளையராஜா வரிகளில் அநன்யா பட் இப்பாடலை பாடியிருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு யானைக்கும் அதனுடைய பாகனுக்கும் இடையிலான உறவை பழங்குடியின மக்களின் வாழ்வியலை பின்னனியாகக் கொண்டு ஆக்ஷன், எமோஷன் கலந்து இப்படம் உருவாகியிருப்பது போல் தெரிகிறது.
ட்ரைலரின் இறுதியில் விஜயகாந்த் முகம் இடம்பெற்றுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் நடிக்கவைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரின் பிரபல பாடலான ‘நீ பொட்டு வச்ச தங்க குடம்...’ பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. இதே பாடல் கடந்த செப்டம்பரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற லப்பர் பந்து படத்திலும் இடம்பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது. ட்ரைலரில் இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்முக பாண்டியன் இப்படத்தை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் ஒரு நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.