ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அமல்படுத்தியே ஆகவேண்டும் என்று பா.ஜ.க அரசு தீவிர முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதனை மீறியும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் குழு ஒன்றை அமைத்தது.
அந்த குழு, பொதுமக்கள் அரசியல் கட்சிகள், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட பலரிடம் கருத்து கேட்டு 18,626 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் கடந்த மார்ச் மாதம் சமர்பித்தது. இத்தகைய சூழலில் தான் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த மசோதாவை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நாட்டில் ஜனநாயகத்தைக் கொன்றுவிடும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘கூட்டாட்சி தத்துத்துவத்துக்கு எதிரான நடைமுறையான ‘ஒரே நாடு ஒரே தேர்தலை’ இந்தியா கூட்டணி எதிர்க்கிறது. ஏனென்றால், அந்த திட்டம் நாட்டை ஒன்றை ஆட்சி வடிவத்தின் அபாயங்களுக்குள் தள்ளும். நாட்டின் ஜனநாயகம், பன்முகத்தன்மையை அது அழித்துவிடும். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான குடியரசுத் தேர்தல் முறையை நடத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மத்திய பா.ஜ.க அரசு தள்ள முயல்கிறது. முன்மொழியப்பட்ட மசோதா, நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டால், நாடு அராஜகம் மற்றும் சர்வாதிகாரத்தில் நழுவுவதைத் தடுக்க, நமது மாபெரும் அரசியலமைப்பை உருவாக்கியவர்களால் அவ்வப்போது தேர்தல்கள் வடிவில் வைக்கப்பட்டுள்ள சட்டச் சோதனைகள் மற்றும் சமநிலைகள் நீக்கப்படும்.
மேலும், மாநிலத் தேர்தல்கள் அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தை இழக்கும். மாநிலங்கள் உரிமையை இழந்து பிராந்திய உணர்வுகள் மற்றும் பன்முகத்தன்மை அழிக்கப்படும். இந்தியாவின் அரசியலை மாற்றியமைக்க அச்சுறுத்தும் முக்கியமான சட்டத்தை நிறைவேற்ற பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை இல்லை. இருப்பினும் கூட, நாட்டின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பா.ஜ.கவின் தோல்வியிலிருந்து திசை திருப்ப ஒரு துணிச்சலான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவையும், அதன் பன்முகத்தன்மையையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு, தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் திணிக்கப்பட்ட இந்த முறையை எதிர்த்துப் போராட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.