வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், செம்பரம்பாக்கம் ஏரியை இன்று (16-12-24) ஆய்வு மேற்கொண்டார். அவருடன், அமைசசர் தா.மோ.அன்பரசன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலக்கப்படுகிறது என்று சொன்னதற்கு தான் நாட்டில் உள்ள பலருக்கு கோபம் வருகிறது. பொதுவாகவே நமது சமுதாயத்தில் ஒரு பிரச்சனை இருக்கிறது. குப்பைகள் போன்ற எதுவாகினும், அதை ஏரியில் தான் கொட்டுகிறார்கள். ஆம்பூர் , வாணியம்பாடி பகுதியில் குப்பைகளை கொட்டி கொட்டி, பாலாறே மிகவும் மோசமாகிவிட்டது. ஆகையால், மக்களுக்கு அந்த விழிப்புணர்வு வரவேண்டும்.
குப்பைகளை அள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால், அந்த குப்பைகளை எங்கே கொட்ட வேண்டும் என்பதை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். அதனால், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளில் மக்கள் குப்பைகளை கொட்டக் கூடாது” என்று தெரிவித்தார்.