டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு கோவில்கள் திறக்கப்பட்டால் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்கள் முன்பு இந்து மக்கள் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் சுவாமிநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, “ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு சீரழிவுகள் நடக்கிறது. அனைத்திற்கும் மேலாக நள்ளிரவில் கோவில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுவதும் நடந்து வருகிறது.
நள்ளிரவில் கோவில்களைத் திறப்பது ஆகம விதிகளுக்குப் புறம்பானது. தமிழகத்தில் டிசம்பர் 31 நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தனியார் நிர்வாகத்தின் கீழ் உள்ள முக்கியமான பெரிய கோயில்களில் கூட இந்த நடைமுறையைப் பின்பற்ற அரசு அறிவுறுத்த வேண்டும். டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்பட்டால் அறநிலையத்துறை அலுவலகங்கள் முன்பு இந்து மக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.