
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த புதிய பாலம் நாளை (06.04.2025) திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை, ஏப்ரல் 6ஆம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகிறார். ராம நவமி நாளான அன்று, நண்பகல் 12 மணியளவில், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து, சாலை பாலத்திலிருந்து ஒரு ரயிலையும் கப்பலையும் கொடியசைத்து தொடங்கி வைத்து, பாலத்தில் நடைபெறும் போக்குவரத்து செயல்பாட்டையும் அவர் பார்வையிடுகிறார்.
அதன்பிறகு மதியம் 12.45 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பிற்பகல் 1.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் 8,300 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாட்டில் பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார். புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கும் பிரதமர், ராமேஸ்வரம் - தாம்பரம் (சென்னை) இடையே புதிய ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தேசிய நெடுஞ்சாலை எண் 40இல் வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை பிரிவில் 28 கிலோமீட்டர் நீளப் பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்றுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். தேசிய நெடுஞ்சாலை எண் 332இல் விழுப்புரம் – புதுச்சேரி பிரிவில் 29 கிலோ மீட்டர் நீளமுள்ள 4 வழிச்சாலை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தேசிய நெடுஞ்சாலை 32இல் 57 கிலோ மீட்டர் நீளமுள்ள பூண்டியாங்குப்பம் – சட்டநாதபுரம் பிரிவையும், தேசிய நெடுஞ்சாலை 36இல் சோழபுரம் – தஞ்சாவூர் பிரிவில் 48 கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதியையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்த நெடுஞ்சாலைகள் பல புனிதத் தலங்களையும் சுற்றுலாத் தலங்களையும் இணைக்கும். நகரங்களுக்கு இடையிலான தூரத்தைக் குறைத்து, மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, துறைமுகங்கள் ஆகியவற்றுக்கு விரைவாக போக்குவரத்தை வழங்க உதவும். மேலும் உள்ளூர் விவசாயிகள் வேளாண் பொருட்களை அருகிலுள்ள சந்தைகளுக்கு எளிதில் கொண்டு செல்ல இவை உதவும். உள்ளூர் தோல் தொழில்களையும் சிறு தொழில்களையும், பொருளாதார நடவடிக்கைகளையும் புதிய சாலை ஊக்குவிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.