
சென்னையில் மாமூல் கேட்டு மிரட்டல் விட்ட அதிமுக வட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். மாற்றுத்திறனாளியான இவர் திருவல்லிக்கேணி பகுதியில் அஜீஸ் பாய் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை தொடங்கியிருந்தார். கடந்த மூன்றாம் தேதி இரவு அந்த ஹோட்டலுக்கு வந்த நபர் ஒருவர் அவரிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. தான் இந்த ஏரியாவின் அதிமுக வட்டச் செயலாளர். எனவே மாமூல் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
இந்த பகுதியில் ஓட்டல் திறந்துள்ளீர்கள் என்னைக் கூப்பிடாதது ஏன் என கேள்வி எழுப்பி வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். தினமும் தனக்கு மாமூல் தொகை தர வேண்டும் அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது மாமூல் கொடுக்க வேண்டும் என மிரட்டல் விட்டுள்ளார். ஆனால் அதற்கு அப்துல் ரகுமான் தரப்பில் மாமூல் தர முடியாது என தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில், அவர் தரப்பில் இருந்து வேறு ஒரு நபர் வந்து கடையில் மிரட்டல் விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக அப்துல் ரகுமான் தரப்பில் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அதிமுக வட்டச் செயலாளரான ஐஸ் ஹவுஸ் மூர்த்தி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது ஆபாசமாக பேசுதல்; மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.