
நீலகிரியில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். முன்னதாக தோடர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சிகளுடன் முதல்வர் வரவேற்கப்பட்டு இந்த மருத்துவமனை திறப்பு விழாவானது இன்று நடைபெற்றது.
மொத்தம் 353 கோடி மதிப்பீட்டில் 40 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனையானது கட்டப்பட்டுள்ளது. 700 படுக்கைகள், 10 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை திறப்பு விழாவில் நீலகிரி எம்பி ஆ.ராசா மற்றும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் விழா மேடையில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''முதலமைச்சரான உடன் மாநிலத்தின் சிறந்த திட்டங்களில் ஒன்றான எடை குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டத்தை இந்த ஊட்டியில் தான் இரண்டு வருடத்திற்கு முன்பு நான் தொடங்கி வைத்தேன். உங்களுக்கு நன்மை செய்வதற்கு முதல் ஆளாய் இருப்பவர்கள் நாங்கள். உங்களுக்கு துன்பம் என்றால் ஓடோடி வந்து துணை நிற்கக்கூடிய, துயர் துடைக்க கூடிய ஆளும் நாங்கள் தான்.
2009இல் வெள்ளம் ஏற்பட்ட பொழுது துணை முதலமைச்சராக இருந்த நான் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணியில் மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விட நேரடியாக வந்தேன். 2019 ஆம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட பொழுது இரண்டு நாட்கள் இங்கேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக இருந்தேன். ஆ.ராசா, திராவிடமணி, ஆர்.கணேசன், முபாரக் ஆகியோர் என் கூடவே இருந்தார்கள். நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களையெல்லாம் பார்த்து வீடுகளை இழந்தவர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தோம். ஆறுதல் சொன்னோம். அன்று தூக்கத்தில் இருந்து ஆட்சியாளர்களை எழுப்பி நீலகிரிக்கு வர வைத்ததும் திமுக தான். நாம் கேள்வி எழுப்பிய பிறகு தான் சில மணி நேரங்களாவது ஹெலிகாப்டரில் வந்து பார்வையிட்டு விட்டுச் சென்றார் அன்றைய முதலமைச்சர். இதுதான் மக்களுடன் இருக்கக்கூடிய திமுகவிற்கும் மக்களை ஏமாற்ற நினைக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு. அதனால் தான் உங்களுடைய ஆதரவுடன் வளர்ச்சியை நோக்கி நாம் கம்பீரமாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். உயர் கல்வி சேர்க்கை விகிதத்தில் முதலிடம் பெற்றுள்ளோம். இந்தியாவிலேயே வறுமை நிலை குறைவான பட்டினிசாவே இல்லாத மாநிலம் என சாதித்திருக்கிறோம்.

நீலகிரியில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியால் பிரதமர் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை. இதை நான் பிரதமர் மோடியிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என தமிழக மண்ணில் இருந்து பிரதமர் மோடி உறுதி அளிக்க வேண்டும். வக்பு சட்ட திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு எதிரான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எல்லா எதிர்க்கட்சிகளும் விவாதத்தில் கலந்து கொண்டு ஆவேசமாக அறிவுபூர்வமாக விளக்கமாக தங்களுடைய நிலைப்பாட்டை முன் வைத்தார்கள். மக்களவையில் நீலகிரி எம்பி ஆ.ராசா அரை மணி நேரத்திற்கு மேலாக நெருப்பு போல பேசினார். மாநிலங்களவையில் திருச்சி சிவா 20 நிமிடத்திற்கு மேலாக உணர்ச்சிப்பூர்வமாக முழங்கி இருக்கிறார்.
இது ஒரு புறம் இன்னொரு பக்கம் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை எவ்வளவு நேரம் பேசினார் தெரியுமா? ஒரே ஒரு நிமிடம் தான். கிரிக்கெட்டில் முதல் பதிலையே டக் அவுட் ஆகும் பேட்ஸ்மேன் கூட இதைவிட அதிக நேரம் களத்தில் இருப்பார். அப்படி அவர் பேசிய ஒரு நிமிடத்திலும் அதிமுக இதை எதிர்க்கிறதா ஆதரிக்கிறதா என சொல்லவில்லை.
அடுத்த நாளே நாம் சட்டமன்றத்திற்கு வரும் பொழுது கருப்பு பட்டை அணிந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அது மட்டுமல்ல திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடர்வோம் என சட்டமன்றத்திலேயே அறிவித்திருக்கிறோம். நாளை திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்'' என்றார்.