
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த புதிய பாலம் இன்று (06.04.2025) திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை, ஏப்ரல் 6ஆம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் வருகை முன்னிட்டு ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வரவுள்ள மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சார்பில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் மட்டும் சுமார் 4000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாம்பன் அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன்களுடன் காங்கிரஸ் கட்சியினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.