தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானதைக் கண்டித்தும், முதல்வர் மற்றும் டிஜிபி ஆகியோர் உடனடியாக பதவி விலக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவை இணைந்து சேலத்தில் இன்று சாலை மறியல் போராட்டத்தை நடத்தின.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகர காவல்துறை துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அண்ணா பூங்கா அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
போராட்டக் குழுவினர், தடையை மீறி பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் கயிறுகள் மற்றும் தடுப்புகள் மூலம் தடுக்க முயன்றதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையே, ஒரு பிரிவினர் திடீரென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது காவல்துறையினர் உருவபொம்மையை அவர்களிடம் இருந்து பறித்துக்கொண்டனர். இதையடுத்து, போராட்டக்குழுவினரை அவர்கள் கைது செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி, வடக்கு மாநகர செயலாளர் முருகேசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், வடக்கு மாநகர செயலாளர் வெங்கடேஷ், நிர்வாகிகள் சதீஷ்குமார், கதிர்வேல், சசிகுமார் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.