கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரம் வீராணம் ஏரி ஆகும். இந்த ஏரி காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது. இதன் மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்ட பகுதிகளைச் சார்ந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.
இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கீழணையிலிருந்து வடவாறு வழியாக வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வினாடிக்கு 1060 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழைத்தண்ணீர் வினாடிக்கு 72 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. தற்பொழுது ஏரியின் நீர்மட்டம் 46.5 அடியாக உள்ளது.
இதன் முழு கொள்ளளவு 47.5 அடியாகும். ஏரி முழுவதுமாக நிரம்ப ஒரு அடியே உள்ள நிலையில், ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்கு வினாடிக்கு 73 கனஅடியும், விவசாய பாசனத்திற்கு வினாடிக்கு 57 கன அடியும், வி.என்.எஸ்.எஸ் வடிகால் மதகு வழியாக 1583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஏரி வேகமாக நிரம்பி வருவதால் சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர்கள் குமார், அருணகிரி மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஏரியின் கரையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.