சேலத்தில் பள்ளிகளுக்கு குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகள், ஆட்டோ, ஆம்னி கார்களின் தரம் குறித்து வாகன போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறையினர் அடிக்கடி கூட்டுத்தணிக்கை நடத்தி வருகின்றனர். விபத்துகளை தவிர்ப்பதற்காக இவ்வாறு அவ்வப்போது சோதனை நடத்துகின்றனர். இந்நிலையில், சேலம் மேற்கு வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள், மாநகர காவல்துறையினர் இணைந்து சேலத்தில் ஆட்டோ உள்ளிட்ட இதர வாகனங்களை ஜூலை 25ம் தேதி ஆய்வு செய்தனர். மொத்தம் 62 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்டு வந்த 7 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், 7 ஆட்டோ, 3 இதர வாகனங்கள் உள்பட பத்து வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. விதிகளை மீறிய குற்றத்திற்காக 4500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. சரியான விதிகளை பின்பற்றாத சில வாகன உரிமையாளர்களுக்கு 21500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தொகை பின்னர் வசூலிக்கப்படும். அதிகாரிகளின் அதிரடி சோதனையால் விதிகளை மீறி இயக்கி வரும் ஆட்டோ ஓட்டுநர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.