புகார் கொடுத்தவரை அரை நிர்வாணப்படுத்தி விசாரணை செய்த காவல் துணை ஆய்வாளருக்கு 30 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருபவர் ரமேஷ்குமார்,குடியிருப்பின் ஒவ்வொரு வீடுகளுக்கும் தனித்தனியாக தண்ணீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு மெட்ரோ வாட்டர் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதே பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு கீதா என்பவர் குடியேறினார். ஆனால் அவர் வீட்டுக்கான தண்ணீர் வரியை சரியாக செலுத்தாத்தால் மெட்ரோ வாட்டர் நிறுவனம் அவரின் இணைப்பை துண்டித்தது.
இதையடுத்து, ரமேஷ்குமாரின் இணைப்பில் இருந்து தண்ணீர் எடுத்ததால், ரமேஷ் குமார் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காத துணை ஆய்வாளர் விஜயபாண்டியன், விசாரணை என்ற பெயரில் ரமேஷ்குமார் மற்றும் அவரின் மகனை அரை நிர்வாணமாக்கி காவல் நிலையத்தில் அமரவைத்தார்.
இதனால் மனமுடைந்த ரமேஷ்குமார், துணை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், மனித உரிமைகள் மீறப்படுமானால் அதற்கு காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கையும் எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது.
அதனால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உலைச்சலுக்கு இழப்பீடாக துணை ஆய்வாளருக்கு 30 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படுகிறது. அதை பாதிக்கப்பட்டவருக்கு 4 வாரத்திற்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.