வர்த்தக ரீதியில் செயல்படும் கட்டிடங்களுக்குக் கூடுதல் சொத்து வரி விதிக்க கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் உள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், வளையகாரனூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியிடம், கூடுதல் சொத்து வரி செலுத்தும்படி, தட்டான்குட்டை கிராம பஞ்சாயத்துச் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி வர்த்தக ரீதியில் செயல்படும் கட்டிடங்களுக்குக் கூடுதல் சொத்து வரி விதிக்க கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் உள்ளதாகக் கூறி, கல்லூரி நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.
மேலும், வழக்கு விசாரணையின் போது, தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்கள், சொத்து வரி செலுத்தாமல் ஏய்த்து வருவதாகவும், இதனால் பல கிராமங்களுக்கு வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அதிக கட்டணம் வசூலித்து, வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், வரி செலுத்தத் தயங்குவதாக வேதனை தெரிவித்தார்.
கிராம மக்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனவும், சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாகியும் இன்னும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நிலவுவதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரிவிதிப்பு குழுவை அமைக்கும்படி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.
சொத்து வரி மதிப்பீடு, வரி வசூல் போன்ற நடவடிக்கைகளில் மெத்தனப்போக்கு, ஊழல்களில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது .அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மூத்த வக்கீல் கே துரைசாமி, பொதுநல வழக்கில் தான் இதுபோல ஒரு உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றும்,ரிட் வழக்கில் இதுபோல் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் எனவே தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதித்து இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.