கடலூர் அருகே விருத்தாசலம் வேளாண் விற்பனை கூடத்திற்கு அதிக நெல் மூட்டைகள் வந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ளது ஒழுங்குமுறை வேளாண் விற்பனைக் கூடம். மாவட்டத்திலேயே மிகப் பெரிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடமான இங்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருத்தாசலம், திட்டக்குடி, தொழுதூர், மங்கலம்பேட்டை, கம்மாபுரம், வேப்பூர் மட்டுமல்லாமல் அரியலூர், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் தாங்கள் விளைவிக்கும் நெல், உளுந்து, சோளம், கம்பு, எள், மணிலா உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை விற்பனைக்காகக் கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர்.
அதிகப்படியான விவசாயப் பொருட்கள் இங்கு வருவதால் கூட்டத்தைக் குறைப்பதற்காக விவசாயிகளின் நலன் கருதி சம்பா மற்றும் குறுவை சாகுபடி காலங்களில் விவசாயிகளின் சாகுபடி மற்றும் அறுவடைை செய்யும் பகுதிகளிலேயே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்து வந்தது. இதனால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அதிக அளவு மூட்டைகள் வராத வண்ணம் சீராகக் கொள்முதல் நடந்து கொண்டிருந்தது. ஆனால் இந்த வருடத்திற்கான குறுவை நெல் சாகுபடி தொடங்கியும் விருத்தாசலம் வட்டாரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணி நடைபெறவில்லை. இதனால் விவசாயிகள் அதிகளவில் நெல்மூட்டைகளை விற்பனைக்காக ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கொண்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று முன்தினம் விற்பனைக்காக குவிந்த 4 ஆயிரம் மூட்டைகள் விற்பனை செய்யாமல் குடோனிலேயே இருந்ததினால் வெளியிலிருந்து வரும் மூட்டைகளை உள்ளே அனுமதிக்காமல் சாலையிலேயே நிறுத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த டிராக்டர்கள், லாரிகள் அனைத்தும் விருத்தாசலம்- கடலூர் நெடுஞ்சாலையில் இருபுறமும் வரிசையாக நின்றன. தொடர்ந்து இரவு ஏழு மணி ஆன போது வாகனங்கள் அதிகரித்து சாலைகளில் நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வரிசைப்படி வாகனங்கள் நிற்காமல் ஒன்றுக்கொன்று இடித்தபடி சாலையின் நடுவிலேயே நின்றதால் போக்குவரத்து முழுவதும் தடை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து வாகனங்களை சரி செய்து பின்பு உள்ளே கொண்டு செல்ல உத்தரவிட்டனர். அப்போது விவசாயிகளுக்கும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 'மழை காலங்களில் நெல் மூட்டைகள் நனைந்து விடக்கூடிய சூழ்நிலையில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை உள்ளே கொண்டு செல்ல விடாமல் ஏன் வெளியில் நிறுத்தி வைக்கிறீர்கள்?' எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, காவலர்கள் ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தி வாகனங்களை அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.