கடந்த 17ம் தேதி இரவு விழுப்புரம் அருகே செஞ்சி சாலை ஜெயேந்திரா பள்ளி அருகே அபிராமி என்ற திருநங்கை கொலைசெய்யப்பட்டு கிடந்தது பரபரப்பானது. இந்த கொலைச் சம்பவத்தில் திருநங்கைகள் புனிதா, மதுமதி, கயல்விழி மற்றும் அவர்களது நண்பர்கள் வீரபாண்டியன், சகாயம், ஆமோஸ், இம்தியாஸ் ஆகிய ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 7 பேரும் பத்திரிகையாளர்கள் முன்பு ஆஜர்படுத்திய மாவட்ட எஸ்பி.ஜெயக்குமார் கூறும்போது...
விருத்தாசலத்தை சேர்ந்த அபி என்கிற அபிராமி 10 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரத்தில் திருநங்கைகளோடு அய்யங்கோவில்பட்டு பகுதியில் தங்கியிருந்தார். புனிதா என்ற திருநங்கையின் சகோதரர் தங்கதுரையை திருமணம் செய்து கொண்டார் அபிராமி. அவரிடம் இருந்து நிறைய பணம் பெற்று அந்த பணத்தில் விருத்தாசலத்தில் இரண்டுமாடி கட்டியுள்ளார். இதனால் புனிதா உட்பட அவரது குடும்பத்தின் அபிராமி மீது கடும்கோபத்தில் இருந்தனர்.
அதோடு அபிராமி அப்பகுதியில் தலைவி போல செயல்பட்டுள்ளார். இதனால் அபிராமி வீட்டுக்கு வேலைக்கு வரவில்லை என்று மதுமதி, சகாயம், ஆமோஸ், இம்தியாஸ், ஆகியோர் அபிராமி மீது கோபத்தில் இருந்துள்ளனர். இந்தநிலையில் மேற்படி மூவரும் அபிராமியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர். சம்பவத்தன்று அபிராமி, புனிதா, கயல்விழி, மதுமதி ஆகியோர் செஞ்சி சாலையில் பாலியல் தொழிலுக்காக சென்றுள்ளனர். அப்போது விடியற்காலை 4 மணியளவில் திருநங்கைகள் நால்வரும் கூட்டுசேர்ந்து அபிராமி முடியை பிடித்து இழுத்து நிலைகுலைய செய்தனர். அப்போது மறைந்திருந்த வீரபாண்டியன், இம்தியாஸ், சகாயம், ஆமோஸ் ஆகியோர் இரும்பு ராடால் அபிராமியின் பின் மண்டையில் அடித்து கொலை செய்துவிட்டு யாரோ கொலை செய்ததாக நாடகமாடியுள்ளனர் என்றார்.
திருநங்கைகள் வாழ்வு மேம்பட அரசாங்கம் பல்வேறு திட்டங்களை உதவிகளை செய்து வருகின்றன. ஆனால் அவர்களுக்குள் போட்டி பொறாமை என ஒற்றுமையில்லாததன் விளைவு கொலைவரை போயிருக்கிறது.