திருச்சி திருவானைக்காவல் கொண்டையம் போட்டையில் இருந்து சமயபுரம் நோக்கிச் செல்லும், திருச்சி - சென்னை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், கொள்ளிடம் ஆற்றின் பாலத்தை வேகமாக கடக்க முயன்ற கார் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் தடுப்புக்கட்டையை உடைத்துக்கொண்டு 50 அடி கீழே ஆற்றுக்குள்ளே பாய்ந்து, தலைகீழாக கவிழ்ந்து, சுக்குநூறாக சேதமடைந்தது.
கேரளா மாநில பதிவு எண் கொண்ட அந்த சைலோ காரில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த காரில் பயணம் செய்த ஆண்,பெண் இருவரும் கணவன் மனைவியாக இருக்கக்கூடும் என போலீசார் அனுமானித்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருச்சி ஸ்ரீரங்கம் காவல்நிலைய போலீசாரும், ஸ்ரீரங்கம் தீயணைப்பு மீட்புத் துறையினரும், ரோப் கிரெயின் வாகனத்தின் உதவியுடன் காரையும், இறந்தவர்களின் உடல்களையும் ஆற்றுக்குள் இருந்து மீட்டெடுத்தனர்.
இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணிநேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கிய காரில் இருந்த உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில், திருச்சி விமான நிலைத்திற்கு வந்திறங்கிய, கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவருக்கு சொந்தமான உடைமைகள் என்பது தெரியவந்தது. அதில் விமான நிலைய சீல்களும் இருந்தன.
அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் பலியானவர் ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவியாக இருக்கக்கூடும் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது. மேலும் சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் காமினி நேரில் வந்து விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார்.