அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் கடந்த சில ஆண்டுகளில் அடுத்தடுத்து சாதித்து வருகிறார்கள். கடல் கடந்து இருந்தாலும் தமிழுக்காகவும் மண், மரபு, மொழி காக்கவும் தங்கள் வருமானத்திலிருந்து செலவு செய்து காத்து வருகிறார்கள்.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைய அயராது உழைத்து இருக்கைகளை அமைத்துவிட்டனர். கலாச்சாரம், பண்பாடு மறவாமல் தங்கள் குழந்தைகளையும் வளர்த்து வரும் இவர்கள் ஒன்றிணைந்து கடந்த சூன் மாதம் நடைபெற்ற தமிழ்பேரவை 2018 ம் விழாவில் பங்கேற்ற 1200 க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒருங்கிணைந்து அனைவரும் தாய்மொழி தமிழில் கையொப்பமிட்டு கின்னஸ் சாதனையை நிகழ்த்தினார்கள்.
சிறப்பு விருந்தினராக நடிகர் ஆரி மற்றும் கார்த்தி சிவகுமார் கலந்து கொண்டு தமிழில் கையொப்பமிட்டு மேலும் சிறப்பு செய்தார். ஹூஸ்டன் தமிழ் இருக்கை குழு, தமிழ்பேரவை (பெட்னா), மெட்ரோபிளக்ஸ் தமிழ்சங்கம், பாரதி கலை மன்றம் மற்றும் டிரடிஷனல் இந்தியா இணைந்து இந்த சாதனை நிகழ்த்தினர். அடுத்தடுத்து சாதித்து வரும் அமெரிக்கா வாழ் தமிழர்களைப் பார்த்து இன்னும் பிற நாடுகளில் வாழும் தமிழர்களும் ஆர்வம் கொண்டுள்ளனர்.