ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டதை என்றைக்கும், யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனாலும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகாலமாக சிறைதண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் இன்னும் காலம் தாழ்த்தி அரசியல் நடத்தாமல், அவர்களுக்கு நல்ல தீர்ப்பு தரவேண்டும்.
ஏனென்றால் அவர்கள் பல ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்ததை கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும், ஆளுநரும் இந்த பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக எழுபேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளுகின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.