
பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகத்திற்கு வருகை தந்து சுமார் முப்பத்தி ஒரு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பிற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து காவல்துறையினர் சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதில் திருச்சி மாநகர உதவி ஆணையர் கென்னடி மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் கோசல்ராம், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் சரஸ்வதி ஆகியோர் பாதுகாப்பு பணிக்காக இங்கு இருந்து ஜீப்பில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சென்னை சாலையில் உள்ள தொழுதூர் என்ற இடத்தில் ஜீப்பின் முன்பக்க டயர் வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வரும் எதிர் சாலைக்கு சென்று ஒரு கார் மீது மோதியுள்ளது. இதில் ஓட்டுனர் மற்றும் ஆய்வாளர் சரஸ்வதி இருவரும் பலத்த காயமடைந்தனர். விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.