அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ஆளுநர் அத்துமீறலுக்கு உதராணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியி மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலை கழகத்திற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய தம்ம சூர்ய நாராயண சாஸ்திரி என்பவரை ஆளுநர் தன்னிச்சையாக நியமித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அந்த பல்கலைக்கழகத்தின் விதிகளின்படி தெரிவுக்குழு தேர்வு செய்து அளிக்கும் பட்டியலில் இருந்து ஒருவரைத்தான் ஆளுநர் தேர்வு செய்யவேண்டும். ஆனால், தெரிவுக்குழு அளித்திருந்த மூவரையும் நிராகரித்து புனே பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் சூர்ய நாராயண சாஸ்திரியை இறக்குமதி செய்து ஆளுநர் நியமித்திருப்பது முற்றிலும் வரம்பு மீறிய செயலாகும்.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டதிலிருந்து மாநில அரசின் அதிகாரங்களில் அத்துமீறி தலையிடுகிறார். ஆய்வு என்ற பெயரில் ஊர் ஊராகச் சென்று மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்களை அழைத்து உத்தரவு பிறப்பித்து போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இதைத் தட்டிக்கேட்கும் தைரியம் மாநில அதிமுக அரசுக்கு இல்லாததால் அவருடைய அடாவடி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மேலும், தற்போது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சூர்ய நாராயண சாஸ்திரி 2006-2009 கால கட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பல்கலைக்கழத்தில் இளநிலை சட்டக்கல்வி இயக்குநராக பணியாற்றிபோது பல்வேறு புகார்களுக்கு உள்ளாகி ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர். அப்படிப்பட்ட ஒருவரை சட்டப்பல்கலை கழக துணைவேந்தராக திணித்திருப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
எனவே, சூர்ய நாராயண சாஸ்திரியின் நியமனத்தை ரத்து செய்து தெரிவுக்குழு பரிந்துரையின் அடிப்படையில் தகுதியான ஒருவரை துணைவேந்தராக நியமிக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.