சேலத்தில் கொலை, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய 8 ரவுடிகள், ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியைச் சேர்ந்த குமரேசன் மகன் வினோத்குமார் (26). ரவுடி. இவர், கடந்த செப். 6ஆம் தேதி அன்று இரவு, அதே பகுதியைச் சேர்ந்த தனது கூட்டாளிகள் கவுதம், மணிகண்டன், பிரதாப் ஆகியோருடன் காளிகவுண்டர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல், வினோத்குமாரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பிச்சென்றது.
பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த கிச்சிப்பாளையம் காவல் நிலைய காவல்துறையினர், கொலையில் ஈடுபட்ட 23 பேரை கைது செய்தனர். இவர்களில் நந்தா என்கிற நந்தகுமார், முரளி என்கிற வெள்ளையன், விஜி என்கிற பேரல் விஜி, பழனி என்கிற பழனிசாமி ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில், வினோத்குமார் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகளில் சதாம் உசேன், சஞ்சய், மாதவன், புகழேந்தி என்கிற புகழ், சூர்யா, மதன் ஆகிய 7 பேரையும் தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கிறது சேலம் மாநகர காவல்துறை.
மேலும், கடந்த அக். 7ஆம் தேதி, சூரமங்கலம் காமராஜர் நகரைச் சேர்ந்த ஜெயவேல் என்பவரை கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது, கடந்த 2020ஆம் ஆண்டில், சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து கல்லாவில் இருந்த 1.70 லட்சம் ரூபாயைத் திருடியது, அழகாபுரத்தில் உள்ள ஒரு மெடிக்கல் கடையில் ஷட்டரை உடைத்து 19 ஆயிரம் ரூபாய் திருடியது ஆகிய வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர் குற்றங்களில் ஈடுபட்டதோடு, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவித்துவந்ததால் அசோக்குமாரையும் சேலம் மாநகர காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
வினோத்குமார் கொலை வழக்கில் 7 பேர், வழிப்பறி வழக்கில் ஒருவர் என ஒரே நாளில் 8 பேரை குண்டர் சட்டத்தில் சேலம் மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் குற்றப் பின்னணி உள்ள ரவுடிகள் கலக்கமடைந்துள்ளனர்.