![Gold hoarding in the anus ... confiscated intelligence unit](http://image.nakkheeran.in/cdn/farfuture/Kb0E7weS2pSi406mKoqJbXDFrepIxHVvW_5n-4fS5k0/1630495252/sites/default/files/inline-images/air-india-expres.jpg)
திருச்சி விமான நிலையத்தில் மீண்டும் 1.13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிப்பவர்களை இந்திய அரசு மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகளில் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் ஆசனவாயிலில் 475 கிராம் தங்கத்தை வைத்துக் கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அவரிடமிருந்து 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும் அதே விமானத்தில் வந்த பயணிகளில் 9 பேரைச் சோதனை செய்ததில் ஒன்பது பயணிகளும் ஒரே மாதிரியான தங்கச்சங்கிலியை அணிந்திருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் நுண்ணறிவு பிரிவினர் அவர்கள் அனைவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களுடைய பதில்கள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் அவர்களைச் சோதனை செய்தனர்.
இதில் அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த ஒரே மாதிரியான தங்கச் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் மொத்தமாக 1.8 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 90 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே நேற்று ஒரு நாள் மட்டும் விமானத்தில் வந்த பயணிகளில் பத்து பேரிடம் இருந்து மொத்தம் 1.13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.