![g20 Summit held in India Nellai Pottery workers Prepared Hot boxes](http://image.nakkheeran.in/cdn/farfuture/gi7Ht1SK0MVNRY5W5aqpDphn21lCxtOKNrSSP8XSTdY/1672231295/sites/default/files/inline-images/art-img-g20-first.jpg)
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அருகே உள்ள குறிச்சி கிராமம் மண்பானைகள் தயாரிப்பதற்கு மிகவும் பிரபலமான பகுதியாகும். இங்கு ஆதித்தமிழர்கள் தங்களின் தேவைக்காகப் பயன்படுத்திய மண்பாண்ட தயாரிப்புகளை தற்போது வரை பாதுகாத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், இங்கு தயாரிக்கப்படும் பானைகள் பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உலகத் தலைவர்களும், ஏராளமான பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்ற ஜி-20 மாநாடு, அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த ஜி-20 மாநாடுகளுக்கான தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அதற்கான ஆய்வு மற்றும் ஏற்பாடுகளுக்காக, திமுக எம்பியான திருச்சி சிவாவின் தலைமையில் 30 எம்பிக்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஜி 20 மாநாட்டில் பயன்படுத்துவதற்காக, 2 லட்சம் மண் ஹாட் பாக்ஸ்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தயாரிக்கும் பணிகளை, மேலப்பாளையம் குறிச்சி பகுதியைச் சேர்ந்த மண்பாண்ட உற்பத்தி நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மண்பாண்ட ஹாட் பாக்ஸ் மேல்புறத்தில் "ஜி-20 2023 இந்தியா" என்ற முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும். அதனைச் சுற்றி, "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. ஜி 20 மாநாட்டிற்காக, ஆயிரக்கணக்கான பானைகள் தயாரிக்கப்பட்டு, அதற்கு வர்ணங்கள் பூசும் பணியும் நடந்து வருகிறது. அடுத்த சில நாட்களில் இந்தப் பணிகள் முடிவடைந்து பானைகள் கப்பலில் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.
![g20 Summit held in India Nellai Pottery workers Prepared Hot boxes](http://image.nakkheeran.in/cdn/farfuture/GBAMfCmwFcQojGYunmdj6n-tcxGwupyQ5wUYwCGUuSc/1672231318/sites/default/files/inline-images/aaa-art-img-2-g20.jpg)
இந்நிலையில், மண்பாண்ட கலைஞர் முருகனிடம் நாம் பேசிய போது "எங்களுடைய தொழில் செங்கல் தயாரிப்புதான். மேலும், நெல்லை குறிச்சியின் இந்த தயாரிப்பு மலேசியா, துபாய், போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது. அதுமட்டுமின்றி பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளின் வியாபார போட்டியையும் முறியடித்து எங்களின் தயாரிப்பு விற்பனையில் முன்னணியில் நிற்கிறது" எனத் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோவையில் உலக சாதனைக்காக 75 ஆயிரம் மண் ஹாட் பாக்ஸ்கள் தயாரித்து நெல்லையில் இருந்து 17 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது, அங்கு நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சி சிவா, உள்ளிட்டோர் பங்கேற்று, மண்பாண்ட கலைஞர்களைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.