தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். அதே சமயம், இந்த மழையால் சில உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், தந்தையை தேடிப்போன மகன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி ரேவதி. இந்த தம்பதியருக்கு அருண் (28) என்ற மகனும், அம்பிகா (23) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி ‘மிக்ஜாம்’ புயலால் பெய்த மழையால் பள்ளிக்கரணை பகுதியில் சுமார் 10 அடி வரை மழைநீர் தேங்கியிருந்தது. இதனால், அங்குள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறினர். அதன்படி, முருகன் தனது குடும்பத்தினருடன் வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது, முருகன் மட்டும் வீட்டை பார்த்து விட்டு வருவதாக கூறி அங்கிருந்து புறப்பட்டார். வீட்டுக்கு போன தந்தை முருகன் வெகு நேரமாகியும் திரும்பி வராததால், அதிர்ச்சியடைந்த அருண், தனது தந்தையை தேடி அவரது வீட்டிற்கு சென்றார்.
அப்போது அவர், தேங்கியிருந்த மழைநீரில் நடந்து செல்லும்போது கீழே வாய் பள்ளம் இருப்பதை தெரியாமல் பள்ளத்தில் விழுந்த அருண், மழைநீரில் மூழ்கி மாயமானார். மாயமான தந்தை மற்றும் அவரது மகன் ஆகியோரை அவர்களது உறவினர்கள் தேடி வந்தனர். இதில் முருகன் மட்டும் வீட்டின் மாடியில் இருந்துள்ளார். அருண் பற்றி எந்தவித தகவலும் கிடைக்காத காரணத்தினால் பள்ளிக்கரணை போலீசிடம் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், காமகோட்டி நகர் பகுதியில் உள்ள முட்புதரில் அருண், உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் சென்று அருண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையை தேடிச் சென்ற மகன் மழைநீரில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.