விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் எனப் பல்வேறு தரப்பினரும் பல ஆண்டு காலமாகப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி, கோரிக்கை மனுக்கள் கொடுத்து வந்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாகப் பிரித்து அறிவித்தார்.
இதனால், அனைத்துத் தரப்பு மக்களும் சந்தோஷம் அடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் அமைப்பதற்கான நடவடிக்கையை அரசு முன்னெடுத்தது. அதன்படி ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக கள்ளக்குறிச்சி அருகில், 5 கிலோ மீட்டர் தூரமுள்ள, வீர சோழபுரம் என்ற ஊரில் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அந்த நிலம், அவ்வூரிலுள்ள அர்த்தநாரிஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலம்.
இந்தக் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோவிலுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை அரசுக்கு, அறநிலையத்துறை மூலம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அதற்கு முன்பாக, இந்த நிலத்தைக் கொடுப்பது சம்பந்தமாகக் கருத்துக் கேட்புக் கூட்டம், கடந்த அக்டோபர் 29 -ஆம் தேதி, இந்து சமய அறநிலையத் துறையில், ஆட்சியர் நடத்தியதில், ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் கள்ளக் குறிச்சியில் அடிக்கல் நாட்டு விழா நடத்தினார்.
சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை, ரூ.1 கோடியே 98 லட்சத்திற்கு அரசுக்கு வழங்குவது என அறநிலையத்துறை முடிவெடுத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கலெக்டர் அலுவலகம் கட்ட, வீரசோழபுரம் அர்த்தநாரிஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை, அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை, கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக அளிக்கக் கூடாது அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோவில் இடத்துக்குச் சரியான விலையை அரசு கொடுத்து வாங்கி, அந்தத் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தால், அந்தத் தொகை மூலம் கோவிலுக்கு வருமானம் வருமா என்று கேள்வி எழுப்பினர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஆஜரான சிறப்பு அரசு பிளீடர், கோவில் நிலத்தை அரசு குத்தகைக்கு விட ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மக்களின் கருத்து, கேட்கப்பட்டுள்ளது. நிலம், கோவில் பெயரில்தான் இருக்கும். குத்தகை தொகை, ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தப்படும் என்று எடுத்துரைத்தார்.
அப்போது நீதிபதிகள், அந்த நிலத்தில் கட்டுமானப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு பிளீடர் பிரகாஷ் நாராயணன், அந்த நிலத்திற்குச் செல்ல தற்காலிகச் சாலை அமைக்கும் பணி மட்டுமே தற்போது நடந்து வருகிறது. அங்கு தொழிலாளர்கள் தங்குவதற்குத் தற்போது குடிசைகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன என்று பதில் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறை, பதில் மனுவை வரும் டிசம்பர் 9 -ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறும் அதுவரை கலெக்டர் அலுவலகம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் பணிகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் இரண்டு நீதிபதிகள் அமர்வில் உத்தரவிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவானது கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அந்த மாவட்ட மக்கள். அதே நேரத்தில், ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு உரிய நிலத்தை தேர்வு செய்ததில், தற்போது நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தச் சிக்கல் எப்போது தீரும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.