Skip to main content

8 வழிச்சாலைக்கு தடை விதிக்கக் கோரி பூவுலகின் நண்பர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு    

Published on 26/06/2018 | Edited on 26/06/2018
e w


சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  இது குறித்த பூவுலகின் நண்பர்கள் குழு அமைப்பின் விளக்கம்:

தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956ந் படி நிலம் கையகப்படுத்தல் தொடர்பான அறிவிப்பானை அரசிதழில் வெளியான 21 நாட்களுக்குள் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ஆட்சேபனையை தெரிவிக்கலாம். ஆனால், இச்சட்டத்தின்கீழ்  பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தும் அவசியம் இல்லை என்றுள்ளது.


பொதுமக்களின் நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு  "நியாயமான  இழப்பீடு பெறும் உரிமை, மறு வாழ்வு, மறு குடியமர்வு மற்றும் நிலம் கையகப்படுத்தலில் வெளிப்படைத்தன்மை" சட்டம் கொண்டு வந்தது. 

அதன்படி, நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக அறிவிப்பானை அரசிதழில் வெளியான 60 நாட்களுக்குள் மக்கள் கருத்து கேட்கப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது.  

 

 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தில் உள்ள பிரிவு 105ன் படி, இந்த சட்டத்தின் அம்சங்கள்  13 பிற சட்டங்களுக்குப் பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. 

அந்த 13 சட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956 சட்டமும் ஒன்றாகும். இதனால் சமூக பொருளாதார தாக்க ஆய்வும், பொதுமக்கள் கருத்துக் கேட்பும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என ஆகிறது. இது மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையை தடுப்பதாக உள்ளது. 

எனவே 2013ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 105 மற்றும் தற்போது நடைபெற்று வரும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை சட்ட விரோதம் என அறிவித்து தடை விதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளோம்.

 

 மேற்சொன்னவற்றால், சென்னை-சேலம் எட்டு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை சட்ட விரோதமாக அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படலாம் என்று தெரிகிறது.

சார்ந்த செய்திகள்