!["For the first time in the history of the postal service, a certificate of appreciation in Tamil ..." - S. Venkatesh MP](http://image.nakkheeran.in/cdn/farfuture/wLETvqniid7eehIueyV50KzdVPhqKLZ2CE3Uf2TGnHc/1637142001/sites/default/files/inline-images/th-1_2238.jpg)
அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிற பாராட்டுச் சான்றிதழ் இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டுவந்த நிலையில், தற்போது முதல்முறையாக தமிழில் வழங்கப்பட்டுள்ளது. இது பல்வேறு தரப்பினராலும் வரவேற்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இதுகுறித்து செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘அஞ்சல் அலுவலக பண விடைகள் (Money order), சிறு சேமிப்பு படிவங்கள் (Small savings forms) இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருந்ததைச் சுட்டிக்காட்டி இந்திய ஆட்சிமொழி சட்டங்களின்படி மாநில மொழிக்கான உரிமைகளைப் பறிப்பதை அனுமதிக்க முடியாது, சட்டத்தை மீறி இந்தி திணிக்கப்படுவதை ஏற்க மாட்டோம் என்பதை அமைச்சகத்துக்கு உறுதிபட தெரிவித்தோம். அனைத்துப் படிவங்களும் தமிழில் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
அதனையடுத்து, சென்னையில் தலைமை அஞ்சல் பொது மேலாளரை சந்தித்தபோது அஞ்சல்துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து படிவங்களும் தமிழில் இருக்கும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். ஆட்சிமொழி சட்ட விதிகள் முறையாகப் பின்பற்றப்படும் என உறுதியளித்தார்.
!["For the first time in the history of the postal service, a certificate of appreciation in Tamil ..." - S. Venkatesh MP](http://image.nakkheeran.in/cdn/farfuture/nqiczHBIVQACBnRKHmf3ROAmJdkHTQ9KQSY8PMupnEQ/1637142019/sites/default/files/inline-images/th-2_556.jpg)
அதனடிப்படையில் தமிழ்நாட்டில் இயங்கும் 14 ஆயிரம் அஞ்சலகங்களுக்கும் தமிழ் படிவங்கள் விரைந்து அனுப்பிவைக்கப்படும் என தெரிவித்தனர். தற்போது பல அஞ்சலகங்களுக்குத் தமிழில் அச்சடிக்கப்பட்ட படிவங்கள் அனுப்பிவைக்கப்பட்டு கிடைத்துள்ளன. அதனைப் பலரும் மிகுந்த மகிழ்ச்சியோடு பகிர்ந்துவருகின்றனர்.
தற்போது அடுத்தக்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. அஞ்சல்துறை ஊழியர்களுக்கு துறைரீதியாக வழங்கப்படுகிற பாராட்டுச் சான்றிதழ் இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டுவந்தது. ஆனால், தற்போது அஞ்சல்துறை வரலாற்றில் முதல்முறையாக தமிழ் முதன்மை மொழியாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இது அஞ்சல் தமிழுக்குக் கிடைத்த அடுத்தக்கட்ட வெற்றி’ என்று தெரிவித்துள்ளார்.