Skip to main content

''புலியைச் சுட்டுக் கொன்றால் தான் உடலை அடக்கம் செய்வோம்''-புலி தாக்கி இறந்தவரின் உடலுடன் பொதுமக்கள் தர்ணா!

Published on 02/10/2021 | Edited on 02/10/2021

 

TIGER

 

கடந்த ஏழு நாட்களாக நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவன் எஸ்டேட் பகுதியில் வனத்துறையினருக்குப் போக்குகாட்டி வரும்  டி23 புலி இதுவரை நான்கு பேரைக் கொன்றுள்ளது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு நேற்று ஒருவரைக் கொன்றதால் புலியைச் சுட்டுக்கொல்ல வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று, முன்பு கொல்லப்பட்ட 3 பேரையும் அந்த புலி உணவாக உட்கொள்ளவில்லை. ஆனால் நான்காவது நபராக இன்று கொல்லப்பட்டவரைப் புலி உண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

 

தற்போது எஸ்டேட்டை அச்சுறுத்தி வரும் புலிக்கு வயது 13. மேலும் உடலில் காயங்களோடு இந்த புலி சுற்றி வருவதால் ஆட்கொல்லி புலியாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது. மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வண்டலூர் பூங்காவிற்குக் கொண்டுசென்று பராமரிக்கலாம் என்று திட்டமிட்டிருந்த வனத்துறையின் முயற்சி தோல்வியில் முடிய, நேற்று 'டி23' ஐ சுட்டுக்கொல்ல வனத்துறையின் முதன்மை வனத்துறை அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டார்.

 

TIGER

 

ஏற்கனவே அந்த புலியைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நான்காவது நபராக ஒருவரை நேற்று புலி கொன்றது அங்கு மேலும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து மசினகுடியில் புலி தாக்கி இறந்த நான்காவது நபரின் உடலுடன் இன்று அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இன்று உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனையடுத்து வீட்டில் சடங்குகள் நடந்த பிறகு சடலத்தை அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது திடீரென உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 

அப்போது போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள், ''புலியைச் சுட்டுப் பிடிப்பதாக நேற்று மாலை அதிகாரிகள் எங்களுக்கு உறுதியளித்தார்கள். அதன் அடிப்படையிலேயே நாங்கள் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல ஒத்துக் கொண்டோம். ஆனால் தற்போது வரை புலியைச் சுட்டுப் பிடிக்க வில்லை. மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பதற்கான முயற்சி மட்டுமே நடைபெற்று வருகிறது. எனவே புலியைச் சுட்டுப் பிடிக்கும் வரை நாங்கள் உடலை அடக்கம் செய்ய மாட்டோம்'' எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புலி விரைவில் சுட்டுப் பிடிக்கப்படும் என போலீசார் தரப்பில் உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்  இறந்தவரின் உடலை அடக்கம் செய்யப் புறப்பட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்