அரியலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வதாரமாக பருத்தி, மக்காச்சோளம், மிளகாய், மல்லி போன்ற பல பயிர்கள் பயிரடப்படுகிறது. இதில் பருத்தி பயிரடப்படும் விவசாயிகளின் எண்ணிக்கை என்பது அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் சற்று அதிகமாக உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் பயிரடப்படும் மிளகாய், மல்லி, மக்காச்சோளம் போன்ற இதரவகை பயிர்களுக்கு மட்டுமே மறைமுக ஏலமுறையில் அரியலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வாயிலாக தினந்தோறும் ஏலம் நடத்தப்படுகிறது. ஆனால் பருத்திக்கு என்று மறைமுக ஏலம் எதுவும் நடைபெறவில்லை. இதனால் எங்களை போன்ற விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் வெளிசந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யக்கூடிய சூழ்நிலையில் நாங்கள் உள்ளோம்.
தற்போது அரியலூர் மாவட்டத்தின் அருகாமையில் உள்ள திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டம் போன்ற மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும், சென்ற ஆண்டும், இந்த வருடமும் இந்திய பருத்தி கழகத்தால் தினந்தோறும் நடைபெறும் மறைமுக ஏலத்தில் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச விலையாக ரூ.52.78 முதல் ரூ.55.50 வரை கொள்முதல் செய்து வருகிறார்கள். இதன் மூலமாக விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதோடு மட்டுமல்லாமல் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்கள்.
தற்போது நம்முடைய மாவட்டத்தில் பருத்தி மற்றும் மக்காச்சோளம் பயிர் சாகுபடிக்காக விதைகள் நடவு செய்யும் பருவம் இந்த பருவத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் புத்துயிர் கொடுக்கும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் இந்திய பருத்தி கழகத்தால் தினந்தோறும் பருத்தி கொள்முதல் செய்யக்கூடிய வகையில், விவசாயிகளாகிய நாங்கள் பயன்பெற ஏதுவாக நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைத்து கொடுத்து உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்து தருமாறு அனைத்து விவசாயிகள் சார்பில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.