'தூய்மை இந்தியா' என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விளம்பரம் கொடுக்கிறார். அவரது கூட்டணியில் உள்ள அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி அரசு, குடிநீர், கழிப்பிட வசதியில் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது என அறைகூவல் விடுகிறது. ஆனால் ஒரு அமைச்சரின் தொகுதி, அதுவும் அவரது கிராமத்திற்கு பக்கத்துக் கிராமத்தில் உள்ள பெண்களோ, 'அவசரத்திற்கு ஒதுங்க ஒரு பொதுக் கழிப்பிடம் கட்டிக் கொடுங்க' என வேதனையுடன் கூறுகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள குருசான்வலசு காலனி என்ற கிராமத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் அதன் தாலுகா செயலாளர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் வைத்த வேண்டுகோள்கள், எங்களின் கிராமத்தில் கழிப்பிட வசதி இல்லாமல் பலரும் சாலையோரம் அல்லது திறந்த வெளியில் தான் அவசரத்திற்கு ஒதுங்குகிறோம். இது பெண்களுக்கு மிகப் பெரிய சிரமமாக உள்ளது. ஆகவே பெண்களுக்கு என ஒரு பொதுக் கழிப்பிட வசதி அமைக்க வேண்டும், அதே போல் கிராமத்தில் கழிவு நீர் தேங்காத வகையில், சாக்கடை வசதி அமைத்துக்கொடுக்க வேண்டும், குடியிருப்புகள் மீது தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை மாற்றியமைக்க வேண்டும். வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்த தகுதியான அனைவருக்கும் வீட்டுமனை வழங்க வேண்டும். முதியோர்களுக்குப் பாரபட்சமில்லாமல் உதவித்தொகை வழங்க வேண்டும்" எனக் கூறினார்கள்.
இந்தக் கூட்டத்தில், கிளை தலைவர் வசந்தமணி, செயலாளர் சுமதி, பொருளாளர் சகுந்தலா, துணைத் தலைவர் வசந்தா, துணைச் செயலாளர் சுமதி, நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் பாப்பா, மலர்கொடி உள்ளிடவர்கள் கலந்து கொண்டனர். இந்த குருசான்வலசு காலனி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வசிக்கும் அவரது கவுந்தப்பாடி கிராமத்திற்கு நான்கு கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.