மக்களின் பெருந்துன்பமாக மாறிப் போனது, கொரோனா வைரஸ் தொற்று அச்சம். ஈரோட்டுக்கு வந்த தாய்லாந்து நபர்களால் கொரோனா ஈரோட்டில் கால் பதித்தது. பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாய்லாந்து நபர்கள் ஆறு பேரில் இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. அதேபோல் அவர்களோடு பழகிய 15 பேர் அதே மருத்துவமனையில் தனிமை படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு வைரஸ் தொற்று நேற்று மாலை உறுதியானது.
இந்நிலையில் ஈரோடு ரயில்வே காலனி ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு மருத்துவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணி மாறுதல் பெற்று கோவை சென்றுள்ளார். அவருக்கும் கொரோனா அறிகுறி உள்ளதாகவும் தற்போது கூறியுள்ளனர். ஆக ஈரோட்டில் இரண்டாக இருந்த கொரோனா வைரஸ் இப்போது நான்காக மாறி உள்ளது. மேலும், ஈரோட்டில் மட்டும் 1118 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மாவட்டங்களில் சில பகுதிகளில் 500 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு கொல்லம்பாளையம் ரேஷன் கடையில் பணியாளராக வேலை பார்த்த 44 வயது தேன்மொழி என்ற பெண் நேற்று மாலை காய்ச்சல் காரணமாக இறந்தார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என மாவட்ட நிர்வாகம் கூறியிருக்கிறது. ஆனால் தாய்லாந்து நபர்கள் இருந்த அப்பகுதியில் அவர் வேலை பார்த்துள்ளார் என்பதால் அவர் இறப்புக்கு இந்த வைரஸ் தான் காரணமாக இருக்கும் என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.