அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் அபி மற்றும் லிபி ஆகிய இரண்டு சிறுமிகள் கடந்த 2017ஆம் ஆண்டு, ரயில் பாலத்தை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். வெகு நேரமாகியும் சிறுமிகள் வீடு திரும்பாததால், இது குறித்து அவர்களின் பெற்றோர்கள் போலீசாருக்கு புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில், சமூக வலைதளப் பக்கத்தில் லிபி கடைசியாக பதிவிட்ட புகைப்படத்தை அடிப்படையாக கொண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது, ரயில்வே பாலத்தை ஒட்டிய மலை அருகே வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளின் கீழ் சிறுமிகள் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளனர். இருவரின் கழுத்து பகுதி பலமுறை அறுத்தப்பட்டிருந்ததோடு, லிபி நிர்வாணமாக கிடந்துள்ளதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் சிறுமிகளின் குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கியது.
சிறுமிகள் கொல்லப்படுவதற்கு முன்பு, இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இந்த இரட்டை படுகொலை சம்பவம் தொடர்பாக எந்தவித துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறிய நிலையில், லிபியின் செல்போன் மூலமாக முதல்முறையாக துப்பு கிடைத்தது. புகைப்படக் கலையில் ஆர்வமிக்கவரான லிபி, அந்த இடத்தில் வைத்து வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். 43 வினாடிகள் மட்டுமே பதிவாகியிருந்த அந்த வீடியோவில், நடுத்தர வயதுடைய ஆண் ஒருவர் பின்னாலில் இருந்து ஓடி வருவது போல் காட்சி அளித்திருந்தது. அந்த வீடியோவில் வரும் அடையாளம் தெரியாத ‘பிரிட்ஜ் கை’ என்ற ஒற்றை அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு, குற்றவாளியை 5 ஆண்டுகள் தேடியும் ஏமாற்றமே மிஞ்சியது.
இறுதியாக அந்த நபர் அணிந்திருந்த ஆடையை வைத்தும், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டை வைத்தும், கடந்த 2022ஆம் ஆண்டு ஆலன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு இண்டியானா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது குற்றவாளி ஆலனுக்கு, இருவரின் கொலைகளுக்கும் தலா 65 ஆண்டுகள் என மொத்தம் 130 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.