Skip to main content

தவணை கட்டாததால் 11 வயது மகளைக் கடத்திய தனியார் நிதி நிறுவன ஊழியர்!

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

 employee  private financial firm kidnapped her 11-year-old daughter pay off loan she had taken from her father

 

குடும்பத்தினர் வாங்கிய கடனில் ஒரு தவணை கட்ட தாமதமானதால் 11 வயது மகளைத் தனது நிறுவனத்திற்கு இழுத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். தனியார் நிதி நிறுவன அடாவடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று போர்க்குரலும் எழுந்துள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வனத்துராஜா - செல்வி தம்பதி. கூலித் தொழிலாளிகளான இவர்கள் குடும்ப சுமையைக் குறைக்க கீரனூரில் செயல்படும் நிதி நிறுவனத்தில் 2வது முறையாக ரூ. 50 ஆயிரம் கடன் பெற்று மாதம் ரூ. 2,500 வீதம் தவணைத் தொகை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் பள்ளிகளும் திறந்து செலவுகள் அதிகரித்துள்ளதால் ஜூன் மாதம் தவணை செலுத்த சில நாட்கள் தாமதமானது. தவணைத் தொகையை வசூலிக்க வந்த நிதி நிறுவன ஊழியர் விக்னேஷிடம் சில நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர். அதன் பிறகு 28 ஆம் தேதி மீண்டும் வந்த விக்னேஷ், வனத்துராஜா வீட்டில் இல்லாததால் அவரது 11 வயது மகளைத் தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு வனத்துராஜாவுக்கு ஃபோன் செய்து தவணைத் தொகை கட்டாததால் உன் மகளை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். தவணையைக் கட்டிவிட்டு உன் மகளை மீட்டுச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

 

சில நாட்களில் பணம் கட்டுவதாக வனத்துராஜா கெஞ்சிக் கூறியும் கேட்கவில்லை. வேலைக்குச் சென்ற இடத்தில் வேலையை நிறுத்திவிட்டு உடனே கீரனூர் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்த நிலையில் சிறுமியைக் கடத்திச் சென்ற விக்னேஷையும் காவல் நிலையம் அழைத்து சிறுமியை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த தகவல் வெளியான பிறகு கீரனூர் போலீசார் சிறுமியைக் கடத்திய விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதுபோன்ற பல தனியார் நிதி நிறுவனங்கள் ஏழை கூலித் தொழிலாளிகளைக் குறிவைத்துக் கனிவாகப் பேசி வட்டிக்குப் பணம் கொடுப்பதும் பிறகு தவணை கட்ட தாமதமாகும் போது அவர்களின் வீடுகளில் உள்ள பொருட்களை அள்ளிச் செல்வது; பொது இடங்களில் தரக்குறைவாகப் பேசுவது; தகராறு செய்து தாக்கும் சம்பவங்கள் ஏராளம் நடந்துள்ளது.

 

இப்போது ஒரு தவணை பாக்கிக்காக சிறுமியைக் கடத்தும் கொடூரச் செயலிலும் இறங்கியுள்ள சம்பவம் வேதனை அளிக்கிறது என்று கூறும் பொதுமக்கள், பல நிதி நிறுவனங்கள் தங்க நகை அடகு வாங்க அனுமதி பெற்றுக்கொண்டு அனுமதியே இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கும் கந்துவட்டி கொடுமையும் செய்து வருகின்றனர். தற்போது பிரச்சனையில் சிக்கியுள்ள நிதி நிறுவனம் வட்டிக்குப் பணம் கொடுக்க அனுமதி பெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்