கோயம்புத்தூர் வனக்கோட்டம், பெரியநாயக்கன் பாளையம் சரகம், தோலம்பாளையம் கிழக்கு பீட் வனப்பகுதியில் 2017 ஆம் வருடம் டிசம்பர் மாதம் குஞ்சூர்பதி ஊரைச் சேர்ந்த கார்த்திக் குமார், வயது 33, என்ற நபர் தனது ஊருக்கு வெளிப்பகுதியில் இருக்கும் காட்டில் இறந்து கிடந்த ஒரு ஆணையினை பார்த்துள்ளார்.
இந்த தகவலை கார்த்திக் குமார் அருகில் உள்ள பெருக்குபதி ஊரைச் சேர்ந்த ஈஸ்வரன், வயது28, என்பவரிடம் தெரிவித்துள்ளார். ஈஸ்வரன் உடன் யானை இறந்த இடத்திற்கு சென்று இரு தந்தங்களை உருவி எடுத்து காட்டிற்குள் மறைத்து வைத்துவிட்டு தந்தங்களை எடுத்த விபரத்தினை குஞ்சூர்பதியைச் சேர்ந்த சின்ன போண்டா என்ற வீரபத்திரன், வயது 20 என்பவரிடம் தெரிவித்து தந்தங்களை விற்க கோவனூரைச் சேர்ந்த மான் என்ற தாமோதரனை வரச்சொல்லி காட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த தந்தங்களை காண்பித்து உள்ளார்கள். மானும் தந்தங்களை விற்பதற்க்காக தன் செல்போனில் போட்டோ எடுத்து சென்றுள்ளான்.
இந்த தருணத்தில் ஈஸ்வரன் தந்தங்களை விற்பதற்காக கேரளாவில் வேலை செய்யும் பில்லூர் டேம், கோரபதி ஊரைச் சேர்ந்த தங்கராஜ், வயது 34, மற்றும் மங்களகரைபுதூர் ஊரைச் சேர்ந்த அண்ணாச்சி என்ற மோகன் ராஜ், வயது 46 என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
பின் ஈஸ்வரன் மற்றும் வீரபத்திரன் இருவரும் காட்டிற்குள் சென்று மறைத்து வைக்கப்பட்டு இருந்த தந்தங்களை எடுத்துக் கொண்டு சீலியூர் கிராம வன எல்லைக்கு அருகில் சென்று தங்கராஜ் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரிடம் காண்பித்து உள்ளார்கள்.
பின்னர் அந்த தந்தங்களை அங்கு மறைத்து வைத்துவிட்டு கணுவாய்பாளையத்தில் இருக்கும் டாஸ்மாக் சென்று மது அருந்தி உள்ளார்கள். மது அருந்தி கொண்டு இருந்த போது தங்கராஜ் மட்டும் வெளியே சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று அந்த தந்தங்களை திருடி அதை விற்பதற்க்காக கேரளா எடுத்து சென்றுவிட்டார்.
இவர்கள் மூன்று பேரும் பின் அங்கு சென்று பார்த்த போது தந்தங்கள் இல்லை. இந்த தருணத்தில் மான் என்ற தாமோதரன் தந்தங்களை பற்றி ஈஸ்வரன் மற்றும் வீரபத்திரனிடம் கேட்டபோது அது தொலைந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் மான் அதை நம்பாமல் அவர்கள் இருவரும் தந்தங்களை விற்று விட்டதாக கூறி தன் பங்கு பணத்தினை கேட்டு ஆட்களை வைத்து அடித்து உள்ளான். இந்த செயல் பெருக்குபதி மற்றும் குஞ்சூர்பதி ஊர் மக்களுக்கு தெரிய வந்துள்ளது. ஆனால் இது நடந்து ஒன்றரை வருடம் கடந்த நிலையில் தற்போது விஷயம் வெளியே கசிந்து தெரிய வந்த போது உதவி வனப்பாதுகாவலர், கோவை, வனச்சரகர், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் இதர பணியாளர்கள் 14.10.19 முதல் தீவிர விசாரணை செய்து முதலில் கார்த்திக் குமார், வீரபத்திரன் ஆகிய இருவரை பிடித்து விசாரணை செய்து 29.10.19 அன்று வாக்குமூலங்கள் பெற்று நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்கள்.
பின் கள்ளச்சாராய வழக்கில் சிறையில் இருந்த மானை எடுத்து விசாரனை செய்து வாக்குமூலம் பெற்று 26.10.19 அன்று நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் ஈஸ்வரன் தேடபட்டு வந்தான். ஆனால் ஈஸ்வரன் மதுக்கரை நீதிபதி முன்பு 1.11.19 அன்று சரணடைந்தார்.
பின் மோகன்ராஜ் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் தந்தங்களை தங்கராஜ் என்பவர் தான் திருடி கேரளா எடுத்து சென்றதாகவும் அங்கு விற்க முயற்சி எடுத்து விற்க முடியாததால் அவனிடம் தான் தந்தங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்ததை அடுத்து சரகர் குழு கொச்சின் சென்று தங்கராஜை பிடித்து அங்கு கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த தந்தங்களை கைப்பற்றினர்.
பின்னர் தங்கராஜ் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை விசாரணை செய்து வாக்குமூலங்கள் பெற்று இன்று (5.11.19) நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இரு தந்தங்களின் நீளம் 2 அடி நீளம் கொண்டுள்ளது. இரு தந்தங்களின் எடை சுமார் 5 கிலோ ஆகும்.