
கேரளா தமிழக எல்லையோரம் அமைந்து உள்ள வனப்பகுதிக்குள் ரயில் மோதியதில் அவ்வழியாக சென்ற ஆண் யானை உயிரிழந்தது.
தமிழக கேரளா எல்லையோரம் அமைந்து உள்ள கஞ்சிக்கோடு பகுதியில் இன்று அதிகாலை சென்ற விரைவு ரயில் மோதியதில், அவ்வழியாக ரயில் பாதையை கடக்க முயன்ற ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. காலையில் அவ்வழியாக வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, தண்டவாளம் அருகே அடிபட்டு யானை உயிரிழந்து கிடப்பதை பார்த்து உள்ளனர். பிறகு வனத்துறையினர் ரயில்வேக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த ரயில் மோதியதில் உயிரிழந்தது என்பது குறித்த தகவல் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தெரிய வரவில்லை.

இரவு முதல் அதிகாலை வரை அவ்வழியாக சென்ற ரயில் ஓட்டுனர்களிடம் இது குறித்து தற்போது கேரள ரயில்வே துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து தொடர்பாக வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து யானையை பிரேதப் பரிசோதனை செய்யும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு உள்ளனர். கடந்த சில மாதங்களாக ரயில் மோதி யானை உயிரிழப்பு சம்பவம் குறைந்து இருந்த சூழலில் தற்போது மீண்டும் யானை உயிரிழப்பு நடந்து உள்ளது.