8
சேலம் அருகே விவசாயியிடம் 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தெற்கு காடு பகுதியைச் சேர்ந்த பச்சியப்பன் மகன் பிரபு, விவசாயி. இவர் விளை பொருள்களை சேமித்து வைக்கும் கிடங்கை புதிதாக கட்டியுள்ளார்.
இந்த கிடங்கிற்கு தற்காலிக மின் இணைப்பு கேட்டு, காடையாம்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மின்வாரிய அலுவலகம் தரப்பில் இருந்து அவரை நேரில் வந்து பேசுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அதன்பேரில் சில நாள்களுக்கு முன்பு பிரபு, மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் சுந்தரராஜன் (49) என்பவரை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவர், புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு, 7 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதுகுறித்து நடந்த பேரத்தில், 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக முடிவானது. ஆனால் லஞ்சம் தர விரும்பாத பிரபு, இதுகுறித்து சேலத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரிடம் கடந்த 2 நாள்களுக்கு முன்பு புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் தாள்களைக் கொடுத்து அனுப்பினர். காவல்துறையினர் வகுத்துக் கொடுத்த திட்டப்படி திங்கள்கிழமை (ஏப். 26) மின்வாரிய அலுவலகத்திற்கு பிரபு சென்றார்.
அவர், சுந்தரராஜனிடம் பணத்தைக் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமவுலி, ஆய்வாளர் தங்கமணி ஆகியோர் உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் உதவி பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் மின்வாரிய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.