தேர்தல் பிரச்சாரத்தின் போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறப்பு பற்றி தவறாகப் பேசியிருந்தார் தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா. அவரது பேச்சு அனைத்துத் தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கண்டனங்களும் எழுந்தன.
இந்தச் சூழலில், சென்னையில் நேற்று (28/03/2021) காலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது தாயைப் பற்றி தரக்குறைவாகப் பேசிய ஆ.ராசாவின் பேச்சைச் சுட்டிக்காட்டி கண் கலங்கினார். எடப்பாடியின் இந்த கண் கலங்கல், தமிழகம் முழுவதும் வைரலானது. இந்த நிலையில், ஆ.ராசாவை தொடர்பு கொண்டு சில அறிவுரைகளைக் கூறியுள்ளார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து, இன்று திடீரென செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, தனது செயலுக்கு முதல்வரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்தார்.
இது குறித்து இன்று (29/03/2021) பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆ.ராசா, ''இரண்டு நாட்களுக்கு முன்னர் பெரம்பலூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முதல்வர் குறித்து நான் பேசியதாக எழுந்த பிரச்சினை குறித்து தன்னிலை விளக்கம் அளித்தேன். எடப்பாடி குறித்தோ அவரது அன்னை குறித்தோ நான் தவறாகப் பேசவில்லை. நானும் ஒரு தாயின் எட்டாவது குழந்தை என்கிற முறையில் அப்படித் தவறாகப் பேசவில்லை. முதல்வர் எனது பேச்சால் காயப்பட்டுக் கண்கலங்கினார் என்கிற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைகிறேன். இடப்பொருத்தம் இல்லாமல் சித்தரிக்கப்பட்டு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சு குறித்து மனதின் அடி ஆழத்திலிருந்து வருத்தம் தெரிவிக்கிறேன்.
இன்னும் ஒரு படி மேலே போய் சொன்னால், முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல் உள்ளபடியே காயப்பட்டிருப்பதாக உணர்ந்தால், அவரிடம் எனது மனம் திறந்த மன்னிப்பைக் கோருவதில் தயக்கமில்லை. முதல்வருக்கும், அவரது கட்சிக்காரர்களுக்கும் நடுநிலையாளர்களுக்கும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது எனது பேச்சு இரண்டு தலைவர்களைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனமல்ல. பொது வாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமைகள் குறித்த ஒப்பீடும், மதிப்பீடும்தான். முதல்வர் பழனிசாமி மனம் காயப்பட்டது குறித்த எனது மனம் திறந்த மன்னிப்பைக் கோருகிறேன்'' எனத் தெரிவித்தார்.