-அதிதேஜா
தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப் போவதாக அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. உடனே, தேர்தலை மனதில் கொண்டு வாக்காளர்களுக்கு சட்டப்பூர்வமாக பணம் வழங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது சட்டப்பஞ்சாயத்து இயக்கம். ஏழைகளுக்கு நிதியுதவி அளிக்கத் தடையில்லை என்று அறிவித்தது நீதிமன்றம். உடனே, தலைமைச் செயலகத்தில் வைத்து, ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 சிறப்பு நிதி உதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதத்தில், 32 தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி ரூ.2000-ஐ அவர்களுடைய வங்கிக் கணக்கில் சேரும் வகையில், அதற்கான நிர்வாக அனுமதி ஆணைகளை வழங்கினார்.
இதற்கிடையே, நிதியுதவி பெறும் பயனாளிகள் தேர்வில் குளறுபடி இருப்பதாக, விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் வழக்கு தொடுத்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு சிறப்பு உதவித் தொகை என்று கூறிவிட்டு, தேர்தலை மனதில் கொண்டு குடும்ப அட்டைதாரர்கள் எல்லோருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ‘9 பேர் கொண்ட குழு, பயனாளிகள் பட்டியலை தேர்வு செய்வதாக அரசாணையில் கூறப்பட்டிருக்கிறது. இது முறைகேட்டுக்கு வழி வகுக்கும்’ என்று அவர் முறையிட்டிருந்தார்.
இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, “நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதால், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டது. அதனால், சிறப்பு உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர், பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும், பயனாளிகளின் விவரங்களைக் கணக்கெடுக்கும் பணியும் நிறுத்தப்பட்டுவிட்டது” என்று கூறினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
பொதுவாக தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் போது, புதிய திட்டத்தைத்தான் தொடங்க முடியாது. ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவதில் தடையில்லை என்பது யதார்த்தம். ஆனால், மார்ச் 21-ஆம் தேதி நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர், "தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், இந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம்" என்றார். இதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.
ஆனால், ரூ.2000 திட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததால், தற்போது நிறுத்தி வைத்திருப்பதாகத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்சும் திரும்பத் திரும்ப பொய் சொன்னார்கள். தேர்தல் முடிந்த உடன் கண்டிப்பாக ரூ.2000 கொடுப்போம் என்றும் அவர்கள் வாக்காளர்களிடம் உறுதியளித்தனர்.
மே 27-ஆம் தேதி, நாளை தேர்தல் நடத்தை விதி முடிவுக்கு வருகிறது. எனவே, ஆட்சியாளர்கள் அளித்த வாக்குறுதியின்படி, ரூ.2 ஆயிரம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்கள் பயனாளிகளான வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள ஏழைத் தொழிலாளர்கள்!