Skip to main content

ஏப். 5 முதல் தொடர் ரயில் மறியல்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவிப்பு

Published on 31/03/2018 | Edited on 31/03/2018
dyfi


 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல் 5 முதல் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்துள்ளது.
 

இதுகுறித்து அகில இயதிய செயலாளர் அபாய் முகர்ஜி, தலைவர் முகமது ரியாஸ் மற்றும் தமிழ்நாடு மாநில செயலாளர் எஸ்.பாலா, தலைவர் எம்.செந்தில், பொருளாளர் தீபா ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கல்வி நிலையங்களில், பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 1 முதல் 3ஆம் தேதி வரை சென்னையில் அகில இந்திய இளம்பெண்கள் மாநாடு நடைபெற உள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி வியாசர்பாடி மெகசிங்கபுரம் அம்பேத்கர் சிலையில் இருந்து பேரணியாக சென்று மகாகவி பாரதியார் நகரில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 2 மற்றும் 3 தேதிகளில் அகில இந்திய அளவில் பெண்கள் பங்கேற்கும் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை தி சிட்டிசன் பத்திரிகை ஆசிரியர் சீமா முஸ்தபா துவக்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக நடிகை ரோகிணி பங்கேற்கிறார்.
 

இன்று நாடு மோசமான சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் நாடு முழுவதும் தற்கொலை செய்து மடிகிறார்கள்.  வரதட்சனை கொடுமை, பாலியல் துன்புறுத்தல் என பலவிதங்களில் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். புதிய தராளமயக் கொள்கையால் இளம் பெண்களின் வேலைவாய்ப்பு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
 

மோடி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார். ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியாரிடம் ஒப்படைக்கும் பணியை செய்து வருகிறது.
 

சிபிஎஸ் இ தேர்வில் வினாத்தாள் வெளியானதால் 28 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு வாரியம் மாபிய கும்பலிடம் சிக்கியுள்ளது.  தேர்தல் ஆணையம் கர்நாடக தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே பாஜகவின் ஐடி பிரிவு தேர்தல் தேதியை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து முகநூல் மூலம், ஆதார் மூலம் என அனைத்து தகவல்களும் கசியத் தொடங்கி விட்டன. இதனால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.  தனிமனித சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தும் நடவடிக்கையாகும். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத மத்திய அரசு மதங்களின் மூலம் மக்களை பிளவுபடுத்த பார்க்கிறது.
 

கர்நாடக தேர்தலை மனதில் வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் கடத்தும் மத்திய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களை பெட்ரோலிய ரசயான மண்டலமாக அறிவித்து பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷெல்கேஸ் ஆகிய பெட்ரோலிய பொருட்களை தங்கு தடையின்றி எடுக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழக மக்களுக்கு பாஜக இழைத்துள்ள மிகப்பெரிய தூரோகம்.
 

உடனடியாக நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்க வலியுறுத்தியும்,  காவிரி டெல்டா பகுதியை ரசாயன மண்டலமாக அறிவித்திருப்பதை ரத்து செய்ய வலியுறுத்தியும் தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
 

சார்ந்த செய்திகள்