திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருமண்டபம் அடுத்த ஜே.கே.நகரில் உள்ள செக்போஸ்ட் - 1 உள்ளது. இதன் அருகே காதிராமோத் யோக்பவன் என்ற காதி இந்தியா விற்பனை கூடம் உள்ளது. இங்கே கைவினை பொருட்கள், வீட்டு அழகு பொருட்கள், காதி துணிகள் விற்கும் கடை உள்ளது. இந்த கடையில் காலையில் 50 வயது மதிக்கதக்க 2 பெண்கள் மற்றும் 1 ஆண் கடைக்கு வந்தனர்.
கடைக்குள் உள்ளே வந்து எல்லா பொருட்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தனர். கொஞ்ச நேரம் கழித்து பட்டுப்புடவைகள் இருக்கும் பகுதிக்குள் சென்று கிட்ட தட்ட அரை மணி நேரமாக செலவு செய்து 5 பட்டுப்புடவைகளை தேர்வுசெய்தனர். ஒரு பட்டுப்புடவையின் விலை ரூ.8 ஆயிரம். இதற்கிடையில் இவர்களோடு வந்த ஆண் மெதுவாக வெளியே சென்று கொஞ்ச தூரத்தில் நின்று கொண்டிருந்த காரில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தனர்.
பட்டுப்புடவைகளை தேர்வு செய்த 2 பெண்கள், பில் போடும் வரை அமைதியாக இருந்தவர்கள் 5 பட்டுப்புடவைகளுக்கு ரூ.40 ஆயிரம் பணம் கேட்டப்போது, ஐய்யய்யோ, பணத்தை காரில் வைத்துவிட்டோம், கொஞ்சம் வையிட் பண்ணுங்க போய் எடுத்து வருறோம் என்று சொல்லி புடவைகளை எடுத்து கொண்டு காரில் வைத்துவிட்டு பணத்தை தருகிறோம் என கூறியுள்ளனர். அதற்கு அங்கிருந்த மேலாளர் திண்டுக்கல் தேவி நகரை சேர்ந்த பெருமாள் சரியென ஒப்புக்கொண்டார்.
புடவைகளை எடுத்து சென்ற 2 பெண்களும் காரில் ஏறி அமர்ந்ததை அடுத்து கார் புறப்பட்டது. சுதாரித்த மேலாளர் பெருமாள், காரின் எண்ணை குறித்து அருகில் இருந்த செக்போஸ்ட் போலிசாரிடம் தகவல் சொன்னார்கள்.
கார் எண்ணான டிஎன் 58 கே.1828 என்ற எண்ணை போலீஸ் வாக்கிடாக்கியில் தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவல் அனைத்து காவல் நிலையம் மற்றும் ஹைவே பேட்ரோல் வாகனங்களில் ரோந்து பணியில் இருந்த போலீசார் குறித்து கொண்டு தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதலில் தப்பிய காரை மணிகண்டம் அருகே ரோந்து போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து மாநகர போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்து கோர்ட் குற்றப்பிரிவு எஸ்ஐ கருணாகரன் அங்கு சென்று கார் மற்றும் 3 பேரை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சிக்கியவர்கள் மதுரை திருமங்கலம் செக்கனூரணியை சேர்ந்த மோகன், சுசிலா முத்துலட்சுமி என தெரியவந்தது.
இவர்கள் மீது மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் புடவை திருடியதாக வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து திருடிய புடவைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், காதி மேலாளர் பெருமாள் புகாரின் பேரில் 3 பேர் மீது வழக்குபதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மதுரையிலிருந்து திருச்சி வந்து பட்டுபுடவை திருடி சென்ற பெண்கள் குறித்து தான் தற்போது பரபரப்பாக பேச்சாக இருக்கிறது.