கடந்த சில தினங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் தொடர்மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள் மலையிலிருந்து பெரிய குளத்துக்கு அடுக்கம் வழியாக செல்வதற்காக 38 கிலோ மீட்டர் வரை சாலை அமைக்கப்பட்டு வருகிறது. கொடைக்கானலுக்கு மாற்று வழித்தடமாக உள்ள இந்த சாலையில் பராமரிப்பு பணிகள் முழுமையாக நடைபெறாத நிலையில், பஸ் போக்குவரத்து துவங்கவில்லை.
ஆனால் இந்த சாலையில் அடுக்கம் செமகாட்டு பள்ளம் உள்ளிட்ட சில கிராம மக்களும், விவசாயிகளும் மினிவேன் உள்பட சிறிய வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையின் போது ரோட்டின் இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஐந்து இடங்களில் ராட்சத பாறைகள் சாலையில் உருண்டன. 20- க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
இது குறித்து மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த நெடுஞ்சாலை துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணியை மேற்கொண்டு ராட்ச பாறைகளை வெடி வைத்து தகர்த்தியும், ஜேசிபி மூலம் சாலை சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம். குணாகுகை, தூன்பாறை, பேரிஜம், மன்னவனூர் சூழல் சுற்றுலா தளங்கள் உள்பட 12 சுற்றுலா தளங்கள் இரண்டு நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், சுற்றுலா தளங்கள் மூடுவதாகவும் வனத்துறையினர் அறிவித்துள்ளன. மலைகளின் இளவரசியான கொடைக்கானலை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் தொடர் மழையை கருத்தில் கொண்டு இரண்டு நாட்களுக்கு சுற்றுலா செல்வது தவிர்த்துக் கொள்வது நல்லது.