இந்த ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி., கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதன்படி இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளரான அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சுமார் 4 லட்ச்ம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் பிரியங்கா காந்தி மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று (28.11.2024) பதவியேற்றுக் கொண்டார். அரசியலமைப்பு சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி பிரியங்கா காந்தி பதவியேற்றார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ராகுல்காந்தியிடம் வணக்கம் தெரிவித்தார்.
முன்னதாக இந்த பதவியேற்பு விழாவிற்காக பிரியங்கா காந்தியின் தயார் சோனியா காந்தி, மகன் ரைஹான் வத்ரா, மகள் மிராயா வத்ரா ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வந்தனர். அதே போன்று நான்டெட் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவீந்திர வசந்தராவ் சவான் மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.