Skip to main content

இரண்டு குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய்!

Published on 16/12/2019 | Edited on 17/12/2019

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள எல்லப்பன்பேட்டையை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கும், திருவாரூர் மாவட்டம் குடவாசல் பெரும் பண்ணையூரை சேர்ந்த கலியமூர்த்தி மகள் சிவகாமி (28) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தன்யாஸ்ரீ(4) என்ற மகளும், தமிழ் அமுதன் (1½) என்ற மகனும் இருந்தனர். விஸ்வநாதன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால், சிவகாமி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
 

இந்நிலையில், கடந்த 13- ஆம் தேதி பகலில் சிவகாமி வீட்டின் படுக்கையறை ஜன்னல்கள் வெடித்து சிதறியதோடு, உள்ளே இருந்து பெரும் புகை வெளியேறியது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் சிவகாமியின் வீட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அங்கே படுக்கையறையில் சிவகாமி மற்றும் அவரது இரு குழந்தைகள் மீது தீ எரிந்து கொண்டிருந்தது. உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேரும் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டனர்.

cuddalore district incident police investigation

உடனே அவர்கள் மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். சிவகாமி வீட்டின் படுக்கையறையில் மண்ணெண்ணெய் வாடை வீசியதால் சிவகாமி தனது குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுபற்றி தகவலறிந்த நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் லோகநாதன் தலைமையில், குறிஞ்சிப்பாடி போலீசார் சிவகாமியின் வீட்டுக்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், அப்பகுதி மக்களிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது கணவரின் கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்ட சிவகாமியை விஸ்வநாதன் கண்டித்ததால் மனமுடைந்த சிவகாமி குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

 

சிவகாமியின் கணவர் விஸ்வநாதனுக்கும், அவரது அண்ணன் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததை பார்த்த சிவகாமி கணவரை கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வெளிநாடு சென்ற விஸ்வநாதன் சிவகாமியை செல்போனில் தொடர்பு கொண்டு‘உன்னை எனக்கு பிடிக்கவில்லை. நீ செத்துப்போ, நான் வேறு திருமணம் செய்துகொள்கிறேன்’என்று கூறியதாகவும், அதனால் மனமுடைந்த சிவகாமி அவரது தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு தனது கணவர் திட்டியதை கூறியுள்ளார். மகளை சமாதானம் செய்துள்ளார் தாய். ஆனால் விஸ்வநாதன் மீண்டும் சிவகாமியை தொடர்பு கொண்டு‘நீ இங்கே இருக்க வேண்டாம், வேறு எங்காவது சென்று விடு‘என்று தொடர்ந்து திட்டி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிவகாமி குழந்தைகளை தீ வைத்து கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு குழந்தைகளை எரித்துக்கொன்று தாயும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.