காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன், "அந்தமான் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது.
நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகி பின்னர் 'ஆம்பன்' புயலாக மாறும். வங்கக்கடலில் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால், இன்று முதல் மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசும்.
வங்கக்கடலில் உருவாகும் 'ஆம்பன்' புயல் தமிழகத்துக்கு வராது; ஆந்திரா அல்லது வங்கதேசம் நோக்கி செல்லும். ஆந்திரா அருகே புயல் கரையைக் கடந்தால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் எங்கே கரையைக் கடக்கும் என்பது நாளை அல்லது நாளை மறுநாள் தெரிய வாய்ப்புள்ளது." இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறினார்.