கடந்த 25 ஆம் தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடி கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 21 வயதுடைய இளம் பெண் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில், உயிருக்குப் போராடும் நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளம்பெண்ணை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்ததில் கொடூரமாக தாக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண் குறிஞ்சிப்பாடி அடுத்த பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த மதியழகன் என்பவரின் இரண்டாவது மகள் ரம்யா கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அத்துடன் பி.எஸ்.சி பட்டப்படிப்பு முடித்த இப்பெண்ணுக்கு, வருகிற 10 ஆம் தேதி ஆண்டிமடத்தை சேர்ந்த பையனுடன், திருமண செய்து வைக்க அப்பெண்ணின் பெற்றோர்கள் ஏற்பாடு செய்திருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் உத்தரவின் பேரில், குற்றவாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் ரம்யா கிருஷ்ணனின் Handbag, மொபைல் போனுடன், மற்றொரு மொபைல் போனும், இருசக்கர வாகனமும் இருப்பதை கண்ட காவல்துறையினர் அவற்றை கைப்பற்றி, யாருடையது என தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் கிடைத்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் இரண்டும் கார்மாங்குடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான ஸ்ரீதரை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர். இதையடுத்து நேற்று (27.5.2022) மது போதையில் இருந்த ஸ்ரீதரை கைது செய்த்தனர். அப்போது ஸ்ரீதர் மது போதையில் இருந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அப்போது ஸ்ரீதர் கைகளில் பிளேடால் கிழித்து கொண்டு, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாததால், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் ஸ்ரீதர் சில வருடங்களுக்கு முன்பு, திருமுட்டம் பகுதியில் கல்லூரிப் படிப்பு படித்துக்கொண்டிருந்த போது, அக்கல்லூரியில் பயின்ற பெண்ணின் மூலமாக, குறிஞ்சிப்பாடி பெத்தநாயக்கன்குப்பத்தை சேர்ந்த ரம்யா கிருஷ்ணனுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இத்தொடர்பு நாளடைவில் காதலாக மாறி, ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனுக்கு வேறொரு பையனுடன், அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்தனர். இது குறித்து அறிந்த ஸ்ரீதர், ரம்யா கிருஷ்ணனிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, உன்னை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். ஸ்ரீதரை பார்க்க வந்த ரம்யாகிருஷ்ணனை கார்மாங்குடி கிராமத்தில் உள்ள ஆற்றுப் பகுதிக்கு, அழைத்து சென்ற ஸ்ரீதர், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு சுத்தியால், தலையில் ஓங்கி அடித்துள்ளார். 'என்னை காதலித்து விட்டு, வேறு ஒருவருடன் எவ்வாறு திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டாய்? எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது' என கூறியவாறு, இரும்பு சுத்தியால் பலமுறை தலையிலேயே அடித்துள்ளார். இத்தாக்குதலால் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ரம்யா கிருஷ்ணனை தரதரவென இழுத்துக் கொண்டு அருகில் உள்ள முட்புதர்கள் கொண்ட காட்டுப்பகுதியில் தூக்கி வீசியுள்ளார். பின்னர் அங்கிருந்து ஆற்றுப் பகுதி வழியாக நடந்தே தப்பிச் சென்றுள்ளார்.
இதனிடையே கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒரு சமூகம் என்பதாலும், தாக்குதல் நடத்திய இளைஞர் மற்றொரு சமூகம் என்பதாலும் பா.ம.க மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் பா.ம.கவினர் மற்றும் பெண்ணின் உறவினர்கள் இளம்பெண்ணை கடத்தி சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தியவர் மீதும், அவருக்கு துணையாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று இரவு குறிஞ்சிப்பாடியில், கடலூர் - விருத்தாசலம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பட்டப்பகலில் இளம்பெண்ணை இரும்பு சுத்தியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.