கடலூர் மாவட்டம் திட்டக்குடி காவல் நிலையத்தில் சிறப்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாரதிதாசன். இவர் திட்டக்குடி - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென சாலையில் வந்த மாடு ஒன்று பாரதிதாசனின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதனால் கீழே விழுந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பாரதிதாசன் மீது அச்சமயத்தில் அங்கு வந்த அரசு பேருந்து அவர் மீது ஏறியது. இந்த விபத்தில் பாரதிதாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் நாள்தோறும் விபத்துகளைச் சந்திப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்துப் பல முறை புகார் அளித்து முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாடு மோதிய விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக விருத்தாசலம் அருகே பரவலூர் - கோமங்கலம் இடையே பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தை வேடிக்கை பார்க்க அப்பகுதியில் குவிந்த கூட்டத்தின் மீது கார் ஒன்று மோதியது. இதில் 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் தொடர்புடைய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதே சமயம் மற்றொரு விபத்திற்குக் காரணமாக கார் ஓட்டுநரைப் பிடித்து அங்கிருந்தவர்கள் சரமாரியாகத் தாக்கினர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் காரணமாக விருத்தாசலம் - சேலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் வெகுவாக அவதியடைந்தனர்.