கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பழுப்பு நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இருந்து 7 யூனிட் வழியாக மின்சாரம் சுவிட்ச் கார்டு (Switch Card) மூலமாக மத்திய மின் தொகுப்புக்கும், பிற மாநிலங்களுக்கும் பவர் க்ரிட் (Power Grid) வழியாக மின்சாரம் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
சுமார் 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் செல்லக்கூடிய சுவிட்ச் கார்டு (Switch Card) பகுதியில் உள்ள இரண்டாவது யூனிட் நேற்று (07.12.2020) மாலை எதிர்பாராத விதமாக வெடித்து பெரும் வெப்பத்துடன் தீப்பற்றி எரிந்தது. ஸ்விட்ச் யார்டு பகுதியில் நடைபெற்ற தீ விபத்தால் மின்சாரம் சென்றடைய கூடிய பவர் க்ரிட் (Power Grid) அமைக்கப்பட்ட பகுதிகளான திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் கூறப்படுகிறது. அதேசமயம் இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓராண்டில் கொதிகலன் வெடி விபத்தில் பல உயிர்களை பலிவாங்கிய நிலையில் மணிக்கு 1470 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட என்.எல்.சி.யின் மிகப்பெரிய மின் திட்டமான இரண்டாம் அனல்மின் நிலையத்தில் கடந்த ஓராண்டாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விபத்துகள் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து மத்திய அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இது போன்ற தொடர்ச்சியான விபத்துகள் குறித்தும் விசாரணை நடத்தவும், நடவடிக்கை எடுக்கவும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.