ஆந்திராவில் சேஷாசலம் வனத்தில் உள்ள செம்மரங்களை வெட்டி கடத்துவதை தடுப்பதற்காக ஆந்திரா அரசு செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு என்கிற ஒரு பிரிவை உருவாக்கி ஐ.ஐீ காந்தாராவ் என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்துள்ளது. இவரின் தலைமையில் 50க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர். இந்த செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு தான் கடந்த 2015ல் மரம் வெட்டி கடத்தியவர்கள் என தமிழகத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 20 பேரை சுட்டுக்கொன்றது. அப்போது முதல் தான் இந்த பிரிவுப்பற்றி பரவலாக பேசப்பட்டது.
செம்மரம் வெட்டுவதற்காக தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து தான் அதிகளவில் கூலி தொழிலாளர்கள் வருகிறார்கள், அதோடு இவர்களை ஒருங்கிணைத்து அனுப்புவது இப்பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் தான் என்பது செம்மர கடத்தல் தடுப்பு பிரிவின் குற்றச்சாட்டு.
ஆந்திராவில் சிக்கும் கூலி தொழிலாளர்கள், ஏஜென்ட்கள் மூலம், அந்த அரசியல் பிரமுகர்கள் யார், யார் என்கிற தகவலை வாங்கி 2016லேயே ஒரு பட்டியலை தயாரித்து வைத்தது செம்மர கடத்தல் பிரிவு. அந்த பட்டியலை தமிழக அரசுக்கும் அனுப்பிவைத்தது. அதில் உள்ளவர்களை கைது செய்யச்சொன்னது. தமிழக போலிஸ் அதை செய்யாமல் போக்கு காட்டியதால் அடிக்கடி தமிழகத்துக்குள் வந்து முக்கிய புள்ளிகளை கைது செய்து செல்வது ஆந்திரா போலிசின் வழக்கம்.
அப்படி பல முக்கிய புள்ளிகளை கைது செய்துள்ளது. அப்படி கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் இருந்து வெளியில் வந்தபின் மீண்டும் வழக்குகளில் வந்து ஆஜராவதில்லை என்பது ஆந்திரா காவல்துறையின் குற்றச்சாட்டு. அதேப்போல், மரம் வெட்டச்செல்லும்போது, வெட்டிக்கொண்டு இருக்கும்போது, வெட்டி கடத்தும்போது என பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படும் கூலி தொழிலாளர்கள், பிணையில் வெளியே வந்தபின் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கில் வந்து ஆஜராவதில்லை எனச்சொல்லப்படுகிறது.
அவர்களை ஆஜர்படுத்த வைக்க தமிழக போலிஸாரின் உதவியை ஆந்திரா போலிஸ் கேட்டால் தமிழக போலிஸ் செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது. அதோடு, தற்போது மீண்டும் மரம் வெட்டிகள் அதிகளவில் ஆந்திரா வனத்துக்குள் வருவதாக கூறுகிறது ஆந்திரா வனத்துறையும், செம்மர கடத்தல் தடுப்பு பிரிவும்.
இந்நிலையில், கடந்த ஜீலை 9ந்தேதி வேலூர், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அதிகாரிகளோடு, ஆந்திரா அரசின் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஐீ காந்தாராவ், ஆந்திரா வனத்துறையின் உயர் அதிகாரிகள் வந்து கலந்துக்கொண்ட சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என விசாரித்தபோது, ஜவ்வாதுமலை பகுதி பழங்குடியின மக்கள் மீண்டும் ஆந்திராவுக்குள் அதிகளவில் வந்து மரம் வெட்ட வருகிறார்கள். அவர்களை தடுக்க வேண்டும். அந்த பகுதி மக்களுக்கு சிறப்பு திட்டங்களை ஏற்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர முயற்சி செய்யுங்கள் என வேண்டுக்கோள் விடுத்துள்ளனர் ஆந்திரா அதிகாரிகள். அதோடு, ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் முடிக்கப்படாமல் உள்ளன. இந்த வழக்குகள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பிணையில் வந்தபின் மீண்டும் வழக்கில் ஆஜராகவில்லை. அவர்களை ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றம் பல வழக்குகளில் வாரண்ட் போட்டுள்ளது. அதனை செயல்படுத்த சம்மந்தப்பட்டவர்கைளை கைது செய்து அழைத்து செல்ல உதவி செய்ய வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை தங்களுக்கு நெருக்கமான போலிஸ் சோர்ஸ்கள் மூலம் தெரிந்துக்கொண்ட செம்மர கடத்தல் ஏஜென்ட்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முயல்கின்றனராம்.