கடலூர் மாவட்டம், நல்லூர் வட்டார தொழில் நுட்ப மேலாண்மை முகமை (ATMA) மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் இயற்கை விவசாயம் பற்றி உழவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பெண்ணாடம் அருகே முருகன்குடி கிராமத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் உமாமகேஸ்வரி, உதவி தொழில் நுட்ப மேலாளர் பி.ரமேஷ் ஆகியோர் தற்காலத்தில் இயற்கை விவசாயம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும், அரசு அளிக்கும் உதவிகள், மானியங்கள், வழிகாட்டு முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளித்தனர்.
இந்த பயிற்சியில் செந்தமிழ் மரபுவழி நடுவம் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்ணதாசன், முருகன் ஆகியோர் தங்கள் அனுபவங்கள் மற்றும் இயற்கை இடு பொருட்களான பஞ்சகவியம், பூச்சிவிரட்டி தயாரிப்பு மற்றும் செய்முறை பயிற்சி அளித்தனர். மேலும் பல்வேறு இயற்கை விவசாயம் செய்யும் உழவர்கள் இயற்கை விவசாயத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்தனர். இதில், சுமார் 50 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்த முகாமில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மரபு ரீதியாக சாகுபடி செய்யப்பட்ட விளைப் பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. மரபுவழி விதைகளும், விற்பனைக்காகவும், பார்வைக்காகவும் வைக்கப்பட்டது.
மாப்பிள்ளை சம்பா, கிச்சிலி சம்பா போன்ற பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டும், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை போன்ற பாரம்பரிய தானிய வகைகளை கொண்டும் உணவு மற்றும் கூல் தயாரிக்கப்பட்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.